பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டுள்ளது.
றக்பி விளையாட்டை மேம்படுத்த கிரிஷ் நிறுவனம் கொடுத்ததாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறி நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவும் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
அத்துடன், இந்த வழக்கின் முதலாவது சாட்சியாளர் வழங்கிய வாக்குமூலத்தில் பாதி மாத்திரமே தன்னிடம் உள்ளதாகவும் எனவே முதலாவது சாட்சியாரின் முழுமையான வாக்குமூலத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாமல் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணியிடம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

