உள்ளூர் முக்கிய செய்திகள்

கடற்றொலிலாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டம்

இலங்கையின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் மற்றுமொரு புதிய வேலைத்திட்டம் சிலாபம் மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், திணைக்களத்தின் அதிகாரிகள், சிறிய கடற்றொழில் படகு உரிமையாளர்களின் சங்க உறுப்பினர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்புடன் இது வெற்றிகரமாக இடம்பெற்றது.

இத்திட்டம் முதன்மையாக ஏற்றுமதிக்கு தரமான மீன்களைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது. அதன்படி, ஏற்றுமதி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய படகு உரிமையாளர்கள் (ஒரு நாள் மீன்பிடி படகு உரிமையாளர்கள்) மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஏற்றுமதிக்காக உயர்தர மீன்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவது தொடர்பான செயல்முறை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மீன் ஏற்றுமதியாளர்களையும் கடற்றொழிலாளர்களையும் நேரடியாக இணைப்பதன் ஊடாக, இடைத்தரகர்கள் இன்றி, கடற்றொழிலாளர்களுக்கு தமது மீன் வளத்தை ஏற்றுமதியாளர்களுக்கு நேரடியாகவே அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.

அத்துடன், ஏற்றுமதிக்கு பொருத்தமான மீன் வகைகள், தேவையான அளவுகள் மற்றும் எடை குறித்து ஏற்றுமதியாளர்களிடமிருந்து கடற்றொழிலாளர்களுக்கு நேரடியான தெளிவு கிடைக்கும்.
இதன் மூலம் வளராத சிறிய மீன்களைப் பிடிப்பது தவிர்க்கப்படுவதுடன், இது கடற்றொழில் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் மீன்களைக் கொள்முதல் செய்யும் விலைகள் குறித்து கடற்றொழிலாளர்களுக்கு நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது.

மேலும், ஏற்றுமதிக்கான மீன்களைப் பயன்படுத்தும் முறை, பொதி செய்யும் முறை மற்றும் பாதுகாப்பிற்காக பனிக்கட்டி சேர்க்கும் முறை குறித்து கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

மீன்களைப் பதப்படுத்துதல், பொதி செய்தல் மற்றும் பிற தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் திணைக்களத்தினால் கடற்றொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். சிறிய படகுகள் மூலம் மீன்பிடிக்கும் கடற்றொழிலாளர்களின் ஒன்றிணைப்புடன் ஏற்றுமதிக்காக மீன்களைச் சேகரிக்கும் தனிச் சங்கங்களை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படும் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு நிதி மற்றும் பிற பொருள் உதவிகள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். அன்றாடம் ஏற்றுமதிக்காக கொள்முதல் செய்யப்படும் மீன்களின் விலைகள் குறித்தும் கடற்றொழிலாளர்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கடற்றொழில் சமூகத்திற்கு அதிக வருமானம் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், ஏற்றுமதியாளர்களுக்கும் சர்வதேச சந்தைக்கு பொருத்தமான தரமான மீன்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

எதிர்காலத்தில் அனைத்து சிறிய கடற்றொழில் படகு உரிமையாளர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிறந்த மீன்களை கரைக்கு கொண்டு வருவது தொடர்பான அறிவை வழங்க கடற்றொழில் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

குறித்த இந்த வேலைத்திட்டம் எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முழு நாட்டின் ஏற்றுமதி வருவாயை மேம்படுத்துவதுடன், முதிர்ச்சியடைந்த மீன்களை மட்டுமே அறுவடை செய்வதன் மூலம் மீன் வளத்தை முகாமைத்துவம் செய்தல் மற்றும் பாதுகாத்தல் என்பவற்றுக்கும் விசேட கவனம் செலுத்தப்படும்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் திணைக்களத்தின் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள், மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறிய படகுகளை பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தளம் மாவட்ட கடற்றொழில் சமூகத்தின் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்