மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள வர்த்தகரின் நண்பனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் குப்பை குழியில் வீசியுள்ளதாக வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நண்பனை மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

