அரச வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தீவிர பற்றாக்குறை நிலவி வருவதால், நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, மருந்துப் பற்றாக்குறைக்கு மாற்றுத் தீர்வாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியிடங்களில் மருந்து கொள்வனவுக்கான முறைகள் குறித்து சுகாதார அமைச்சு தெளிவான வழிகாட்டல்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
வைத்தியர்கள் அன்புடனும் அர்ப்பணிப்புடனும் சிகிச்சை சேவைகளை தொடர்ந்து வழங்க முயற்சி செய்துவருகின்றனர்.
இருப்பினும், அனைத்து வைத்தியசாலைகளிலும் மருந்துகளும் உபகரணங்களும் இல்லாத நிலை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஒரு நெருக்கடி உருவாவதற்கான காரணமாக, கடந்த காலங்களில் சுகாதார அமைச்சின் நிர்வாகத் தாமதங்கள் மற்றும் மருந்து விநியோகத் திட்டங்களின் செயலிழப்பு குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், மருந்து மற்றும் உபகரணங்களை வெளியிடங்களில் கொள்வனவு செய்யும் வழியில் ஏற்படும் குழப்பம் காரணமாக, வைத்தியர்கள் அவ்வகை கொள்வனவுகளில் ஈடுபட தயக்கம் காட்டுகின்றனர்.
இதன் விளைவாக, சில வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனவே, மருந்துப் பற்றாக்குறைக்கு விரைவான மாற்றுத் தீர்வுக்காக, வெளியிடங்களில் மருந்துக் கொள்வனவுக்கான நடைமுறைகள் தொடர்பான தெளிவான வழிகாட்டல்களை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.