இலங்கை சுங்கத்துறையின் நடவடிக்கைகள் தொடர்பாக தற்போதுள்ள சர்ச்சை, ஒரு சாதாரண நிர்வாக விஷயமாக அல்ல் இது நாட்டின் சட்டத்திற்கும், அரசின் பொறுப்புக்கும் நேரடியான சவாலை முன்வைக்கிறது.
2024 ஜூலை முதல் 2025 ஜனவரி வரை, 323 கொள்கலன்கள் உரிய சோதனை இன்றி சுங்கத்தால் விடுவிக்கப்பட்டது, நாட்டின் பாதுகாப்பு, வருவாய், மற்றும் நம்பிக்கைக்கு எதிரான செயற்பாடாகவே பார்க்கப்படுகிறது.
இது ஒரு அலட்சியமான தவறு அல்ல — இது திட்டமிட்ட முறையில், ‘வர்த்தக வசதி’ என்ற போர்வையில், நடைமுறை விதிகளை மீறிய செயல் என்பதை நிதி அமைச்சின் விசாரணைக் குழுவின் அறிக்கையே உறுதிபடுத்துகிறது.
பாராளுமன்றத்தில் நடந்த சமீபத்திய விவாதத்தில், இந்த விடயங்கள் மேலும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டன. எதை சோதிக்க வேண்டும்? எதை தவிர்க்கலாம்? என்பதற்கான ‘சுளைம ஆயயெபநஅநவெ’ முறைமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்த முறைகள் “red” மற்றும் “yellow” என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனாலும், 999 உயர் அபாயக் கொள்கலன்கள் 13 முறை சோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளன என்பது வெறும் கணக்குப் பிழை அல்ல, தேசிய பாதுகாப்பு மீதான கடும் அசட்டையும், சட்ட மீறலும் ஆகும்.
சுங்கத்துறை அதிகாரிகள் விளக்குகிறார்கள்: ‘நெரிசலால் பொருள்கள் சிக்குவதைக் கட்டுப்படுத்த, சோதனைகள் தவிர்க்கப்பட்டன வருமானத்தை அதிகரிக்கவே இது செய்யப்பட்டது.’ ஆனால் நாம் கேட்கவேண்டிய கேள்வி – ‘வணிக வசதி என்ற பெயரில் நாட்டின் சட்டத்தையும், பாதுகாப்பையும் புறக்கணிக்க முடியுமா?’
இந்த கேள்வி வெறும் எதிர்க்கட்சி அல்லது ஊடகம் எழுப்பும் ஏக்கமல்ல. இது ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு நாட்டின் வருமானம் மக்களின் வணிகத்தில் மட்டுமல்ல, அவர்கள் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் சட்ட ஒழுங்கின் மீதும் அமைகிறது.
அந்த நம்பிக்கையை சுங்கத்துறை தன்னுடைய ‘ஃப்ளெக்ஸிபிள்'(flexible) நடவடிக்கைகளால் சிதைத்துவிட்டது.
இதனை சரிசெய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? விசாரணைக் குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சென்றதாகவும், ஆனால் அதற்குப் பதில் எதுவும் இன்னும் இல்லை.
பாராளுமன்றம் இந்நிலையில் தவறாகச் செயல்பட்டதா? அல்லது இந்த விடயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அரசு உயரதிகாரிகள் மூலமாகவே பாதுகாக்கப்பட்டுள்ளதா? என்பதுதான் மக்கள் முன் எழும் பெரிய சந்தேகம்.
இன்றைய அரசியல் சூழ்நிலையில், இதுபோன்ற விஷயங்கள் விசாரணை கூறுகளுக்குள் அடைக்கப்படுவதால், மக்கள் நம்பிக்கையே தினசரி கருகுகிறது.
இதில் ஒரே தீர்வே – பொதுமக்களுக்கு முழுமையான தகவலை வெளிப்படையாக வெளியிட வேண்டும். உரிய தரவுகள், எந்த தரப்பின் அழுத்தங்கள், எந்த அதிகாரிகள் அனுமதி வழங்கினர் என்பதைப் புலப்படுத்தி, அவர்களை நீதியின் முன் கொண்டு வருவதில் அரசு காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும்.

