2025ஆம் ஆண்டின் முதற்காலத்தில் சுங்கத்துறை மூலமாக 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதில், வழமைக்கே புறம்பான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும், அந்தக் கொள்கலன்களில் மருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகங்களும் நிலவுகின்றன.
இந்த விடயத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சுங்கத்துறை ஊடக பேச்சாளர், கூடுதல் பணிப்பாளர் நாயகம் சீவாலி அருக்கொடை, வருமானத்தை சேகரிக்க மற்றும் வர்த்தகத்தை எளிதாக்க வேண்டிய பொறுப்பை சுங்கத்துறை வகிக்கின்றதாக கூறினார்.
‘சரக்குகளை நீண்ட நேரம் கையாளாமல் வைத்திருப்பது வணிக நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும்.
இதனால் வருமான உற்பத்தி பாதிக்கப்படும்.
அதன் விளைவாக அரசு வரிவசூலிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் படி, சுங்கத்துறையின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது,’ என்றார் அவர்.
மேலும், அவர் கூறியதாவது: ‘சுங்கத்துறையின் நான்கு பிரதான நோக்கங்கள் வருமான சேகரிப்பு, வர்த்தக வசதிகள், சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவல் மேம்பாடு என்பவையாகும்.
வணிகத்தை தடையின்றி செயல்படச் செய்யும் நடவடிக்கைகள் இவை.
நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் ஸ்கேனிங் பிரிவின் ஊடாக கொள்கலன்களை வழிமாற்றம் செய்வது ஒரு செயல்முறைதான்.
இதனால் சரக்குகளின் ஓட்டம் சீராக நடக்க உதவுகிறது.’
இத்தகைய நடவடிக்கைகள் புதியவை அல்ல என்றும், கடற்படை ஊடாக வரும் சரக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது சுங்க பணிப்பாளர் நாயகத்தின்(DGC) அதிகாரத்திற்குட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
‘அவர் இதுபோன்ற முடிவுகளை எடுக்காவிட்டால், வேறு யாரும் அந்த முடிவுகளை எடுக்க முடியாது’ என்றார் அருக்கொடை.
இந்நிலையில் நிதி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவொன்று தாக்கல் செய்த அறிக்கையின் படி, 2024 ஜூலை முதல் 2025 ஜனவரி வரை 13 வேளைகளில் 999 உயர் அபாய கொள்கலன்கள் சரியான சோதனைகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த விடுவிப்புகள் சுங்கத்தின் நடைமுறைகளையும் சட்டத்தையும் மீறியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய செயல் தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அரச வருமானத்தை ஆபத்தில் ஆழ்த்தக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விடயம், ‘நெரிசலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட செயலா அல்லது சட்ட விரோத நடவடிக்கையா’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
மேலும், அபாய முகாமைத்துவ முறையின் (Risk Management System) நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில், சுங்கத்துறையின் செயல்முறை மற்றும் அதனுடனான பொறுப்புகள் மீதான பொதுமக்கள் நம்பிக்கைக்கு சவாலாக உருவெடுக்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.
அரச மற்றும் சட்ட அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தெளிவான விசாரணை நடத்த வேண்டிய தேவையுள்ளது

