ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் மிட்செல் ஸ்டார்க் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்து, வெஸ்ட் இண்டீஸை 27 ஓட்டங்களுக்கு அகற்றியதுடன், 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என தொடரை கைப்பற்றியது.
ஜமைகா சபினா பார்க் மைதானத்தில் இடம்பெற்ற இந்த டெஸ்டின் மூன்றாவது நாள், பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்திய நாளாக அமைந்தது.
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 121 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பிறகு, வெஸ்ட் இண்டீஸிற்கு வெற்றிக்காக 204 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தொடக்க ஓவரிலிருந்தே ஸ்டார்க் வெறித்தனமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
முதல் பந்திலேயே ஜான் காம்பெல்லை வெளியேற்றிய ஸ்டார்க், அதே ஓவரில் கெவ்லான் ஆண்டர்சன் மற்றும் பிராண்டன் கிங்கையும் வீழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் சொதப்பலான தொடக்கம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது ஓவரில் மிக்கேல் லூயிஸை எல்.பி.டபிள்யூ.வாக வீழ்த்திய ஸ்டார்க், தனது 400வது டெஸ்ட் விக்கெட்டையும் பதிவு செய்தார்.
15 பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டார்க், டெஸ்ட் வரலாற்றில் இதுவரை பதிவாகியிராத வேகமான ஐந்து விக்கெட் சாதனையை பெற்றார்.
மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலண்ட், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஷமார் ஜோசஃப் மற்றும் ஜோமெல் வாரிக்கனைத் தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் 14.3 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இது டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது குறைந்த ஸ்கோராகும். 1955-ல் நியூசிலாந்து 26 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து எதிராக சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 225 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 48, காமரூன் கிரீன் 46 ஓட்டங்கள் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஷமார் ஜோசஃப் 4ஃ33, ஜஸ்டின் கிரீவ்ஸ் 3ஃ56, ஜெய்டன் சீல்ஸ் 3ஃ59 என்ற பந்துவீச்சை வழங்கினர்.
ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் காமரூன் கிரீன் 42 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அல்ஸாரி ஜோசஃப் 5ஃ27 என்ற அவரது சிறந்த பந்துவீச்சு ஆஸ்திரேலியாவை சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 27 ஓட்டங்களுமே எடுத்தனர். ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே இரு இலக்க ஓட்டத்தைக் கடந்தார் (11).
மிட்செல் ஸ்டார்க் 6ஃ9 என்ற பந்துவீச்சு பதிவு செய்தார். ஸ்காட் போலண்ட் 3ஃ2 என்ற பந்துவீச்சுடன் ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 3-0 என தொடரை வென்றதோடு, ஸ்டார்க் தனது 100வது டெஸ்டை ஒருபோதும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றினார்.