இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டி, ‘கறுப்பு ஜூலை’ நினைவேந்தலும் விடுதலைக்கான போராட்டமும் எதிர்வரும் ஜூலை 24 மற்றும் 25 திகளில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெறவுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன், யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (ஜூலை 16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலையின்றி சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதியை வலியுறுத்தும் பொதுநினைவேந்தலும், கவனயீர்ப்புப் போராட்டமும் மக்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.
தமிழ் அரசியல் கைதிகள் நயவஞ்சகமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டமைக்காகவும், தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதற்காகவும், நீதி மற்றும் விடுதலை கோரிக்கையை பலமாக வெளிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
சமூகத்தின் சார்பாக சிறைவாடும் உறவுகளுக்கு விடுதலையும் நீதியும் கிடைக்கச் செய்ய, ‘விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம்’ எனும் உண்டியல் திட்டத்துக்கான நன்கொடை ஆதரவை மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்களிடம் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
இப்போராட்டத்தில் இன, மத, மொழி, வயது, பாலினம், கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து, சமூகநீதிக்காக, விடுதலைக்காக முழுமையாக எதிரொலிக்கும் குரலாகக் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.
இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில், எமது சிறையுறவுகளை உயிரோடு மீட்கும் உந்துதலாக இந்த முயற்சி அமையவுள்ளதாகவும், ‘ஒன்றிணைந்து குரல் கொடுத்து உறவுகளை சிறை மீட்போம். வாருங்கள்!’ என அழைப்பு விடுத்துள்ளார்

