யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற சந்திப்பில், இலங்கைக்கான கனடா தூதுவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெ. ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா, க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கான உதவியை கனடா வழங்கும் என தூதுவர் உறுதியளித்தார்.
காணிப் பிரச்சினைகள், முதலீட்டு வலயங்கள், சமூகப் பிரச்சினைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இந்த சந்திப்பில் விரிவாக உரையாடப்பட்டன.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் தீர்வுகள் முன்வைக்கப்படும் என எம்.பிக்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையுடன் உள்ளனர் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான திட்டங்களுக்கு கனடா உதவ வேண்டும் என எம்.பிக்கள் கோரிக்கை விடுத்ததற்கமைவாக, தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக தூதுவர் பதிலளித்தார்.
முன்னைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும், ஜனாதிபதி மக்களின் தலைவனாக செயற்படுகிறார் எனவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இதே சந்திப்பின் போதே, கனடாவில் வாழும் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ளும் சூழ்நிலைகள் பற்றியும், வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்காகக் கொண்டு செயல்படும் திட்டங்களுக்கான அரசாங்க ஒத்துழைப்பும் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், இலங்கைக்கான தனது தூதுவராக உள்ள சேவைக்காலம் இம்மாதத்தில் முடிவடைந்து தாயகம் திரும்பவுள்ளதையொட்டி, அவரது பங்களிப்புக்கு தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள் நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்தனர்.

