அருகம் குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அருகில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து சுற்றுலாப் பயணி, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணிலிருந்து பெண்ணாக மாறியவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாக, இது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
கடந்த 14 ஆம் திகதி அவர் அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொது அமைதிக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாக இரண்டு வாரங்களும் ஒரு மாதமும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவரது பாலினம் பெண் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அவரது கடவுச்சீட்டில் ‘ஆண்’ என குறிப்பிடப்பட்டிருந்தது புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
இது, இலங்கையில் திருநங்கைகள் உரிமைகள் மற்றும் சட்ட அங்கீகாரம் தொடர்பான பன்முகமான கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமெரிக்கர் ஒருவருடன் அவர் 11ஆம் திகதியில் இருந்து 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு அருகம் குடாவில் ஹோட்டல் தங்குமிடத்தை முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

