பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று (18-07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது, பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் மற்றும் அவர்கள் தாய்மாராகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து இளம்பெண்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
18 வயதிற்குட்பட்ட மாணவிகளின் கர்ப்பம், அவர்களை பாதிக்கப்பட்டவர்களாக மாற்றுவதோடு, பல சமூக சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் குழந்தைகள் பிறப்பதால், அவர்கள் எதிர்காலத்தில் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவோ அனாதையாகவோ ஆகின்றனர். இதைத் தடுக்கும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
ஒரு குழந்தையின் பிறப்புக்குப் பிறகு, அந்த பொறுப்பு ஒரே பெண்ணின் மீது மட்டும் விழக்கூடாது.
உறவுகள் பொறுப்பற்றவையாக இருக்கும்போது குழந்தைகள் சமூக களங்கமாகக் கருதப்படலாம்.
எனவே, குழந்தை பெறாமல் இருக்க விரும்புவோர் அறிவியல் முறையில் கர்ப்பத்தைத் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கரு உருவாகிய பின் அதை அழிப்பது ஒரு குற்றவியல் கொலையாகும் என்பதையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சமூகத்தில் குழந்தைகளை அனாதைகளாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ மாறாமல் இருக்க, இளம்பெண்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

