திருகோணமலை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முக்கிய சந்திகளில் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் வலியுறுத்தினார்.
4ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலை சுற்றுவட்டச் சந்தி, மரத்தடிச் சந்தி, பொதுப்பேருந்து நிலையச் சந்தி, மாநகர சபை சுற்றுவட்டச் சந்தி, துறைமுக பொலிஸ் நிலையச் சந்தி ஆகியவற்றில் சமிக்ஞை விளக்குகள் அவசியம் பொருத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணைகள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளாhர்
திருகோணமலை பொது மீன்சந்தை முதல் மூன்றாம் கட்டை வரையிலான கடற்கரைப் பகுதியில், மாரிக்காலத்தில் கடற்பெருக்கால் மீன்பிடி படகுகள் கடலுக்குள் இழுக்கப்படுகின்றன.
இது மீனவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கின்றதால், பாதுகாப்பாக வள்ளங்களை நிறுத்தக்கூடிய அடுக்குமாடி படகு தரிப்பிடம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
கன்னியா பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டுநர்கள் அவதியடைகின்றனர்.
எனவே, அங்கு எரிபொருள் நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
கன்னியா வெந்நீர் ஊற்றுக் கிணறுகளின் பராமரிப்பு பொறுப்பு முன்னர் பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடம் இருந்தது. தற்போது அது தொல்பொருள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பு மீண்டும் பிரதேச சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் இரவு நேரங்களில் வீதி விளக்குகள் இல்லாததால் மக்கள் இடரடைகின்றனர்.
எனவே, அவ்வீதிகளில் வீதி விளக்குகள் பொருத்த தேவையான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், வரோதயநகர் ஆகிய கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் பெரும் அவலத்தை எதிர்கொள்கின்றனர். இதனை தீர்க்க, இந்த மூன்று கிராமங்களுக்கும் நீர் விநியோகிக்க நீர்த்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

