இறுதிப் போரின் இறுதி கட்ட போர் குற்றங்கள் இனப்படுகொலை, குற்றங்கள் ஆகியவற்றை மட்டும் விசாரிக்க முனையும் சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை தவறானது என்றும், இவ்வாறான விசாரணைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.
செம்மணி சம்பவம் தற்போதைய சூழ்நிலையில், இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் விசாரணைக்கு புதிய வாயிலாக அமையக்கூடும் என்றும், இது சர்வதேசத்தை விரிவான விசாரணையை மேற்கொள்ள அழைக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
செம்மணியை தனித்து பிரித்து, போர்க்கால நிகழ்வுகளை ஒதுக்கிப் பார்க்கும் முயற்சி மிகுந்த ஆபத்தானதென அவர் விவரிததுள்ளார்
இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை மறுக்கும் செயல் என்றும், போரின் பின்னணியில் உள்ள இன அடிப்படையிலான அமைப்புகளையும் அநியாயங்களையும் முழுமையாக எடுத்துரைக்கும் விசாரணை தேவை என்றும் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், மனித உரிமை அமைப்புகள் அவரை வர வேண்டாமென வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்ததனை கஜேந்திரகுமார் கடுமையாக விமர்சித்தார்.
அவர் இலங்கைக்கு ஜெனிவா கூட்டத்ததொடர் நடைபெற முதல் வந்தால் அரசாங்கம் கால அவகாசத்தை கோரக்கூடிய வாய்ப்பிருப்பதால் இப்போது வரவேண்டாம் என கோரியதாக அவர் தெரிவித்துள்ளார்
2021ஆம் ஆண்டு தமிழ்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இணைந்து அனுப்பிய பொது கடிதத்திலுள்ள நான்கு அம்ச கோரிக்கைகளும் இன்று கூட பொருத்தமானவையாக உள்ளன என்றும், அந்தக் கோரிக்கைகள் மறுபடியும் வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மனித உரிமை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட அந்தக் கடிதத்தில் செம்மணி சம்பவமும் சேர்க்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
செம்மணியின் தற்போதைய என்புக் கூடுகளின் கண்டுபிடிப்புகள் – பிற பகுதிகளில் மனித புதைகுழிகள் கண்டறியப்படுவதோடு இணைந்து – இனப்படுகொலை விவகாரத்தை மீண்டும் உலக அரங்கில் எடுத்துச் செல்வதற்கு போதுமான ஆதாரங்களை கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இலங்கையின் சட்டத்துறை அரசு சார்பாக செயற்படுவதால், ஒரு சுயாதீன வழக்குரைஞர் அலுவலகம் அவசியமாக இருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்
ஆனால், அதுவே இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும், சர்வதேசமே பொறுப்பேற்கும் கலப்புப்பொறிமுறை ஒன்றே சாத்தியமான வழியாகும் என்றும், அதற்கே தமிழர் தரப்பினர் உடன்பாடும் தெரிவித்துளளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இனப்படுகொலை தொடர்பான நீதிக்கான வழி, சர்வதேச கட்டுப்பாட்டுடன் கூடிய விசாரணையே என்றும், உள்ளக விசாரணைகள் தமிழ் மக்களுக்கு நீதி வழங்க இயலாது என்பதும் தற்போது தெளிவாகி விட்டதாக கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

