திருகோணமலை சம்பூர் கடற்கரையோர பகுதியில் கண்ணிவெடி அகழும் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மூதூர் – சம்பூர் கடற்கரையோர பகுதியில் கடந்த வியாழக்கிழமை (17-07) நிலக்கீழ் கண்ணிவெடிகள் அகழும் பணியை எம்.ஏ.ஜி நிறுவனத்தினர் தங்களுடைய உபகரணங்களுடன் ஆரம்பித்திருந்தனர்.
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்த இந்த பகுதியில் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டிருந்த அந்நிறுவனம், கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (20-07) மேற்கொண்ட அகழ்வுப் பணியின் போது, மனித எச்சங்கள் வெளிவந்தன.
இதையடுத்து, நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டிய தேவை ஏற்பட்டதால், பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், சம்பூர் படுகொலையை நினைவுகூறும் தூபிக்கு அருகிலுள்ள பகுதியில் அகழப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற இறந்தவர்களுக்கான நீதி கோரலை மீண்டும் ஒருமுறை மீட்டெழுப்பும் எனக் கூறப்படுகிறது.

