பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் தற்போது கடுமையான இராணுவக் கண்காணிப்பின் கீழ் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நேர கட்டுப்பாடுகள், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாமை ஆகிய காரணங்களால், மக்கள் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபட முடியாமல் தவிப்பில் உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தற்காலிக பாதை வழியாக ஆலயத்திற்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியிருந்தாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு அனுமதிக் கடிதமும் வழங்கப்படவில்லை.
35 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 27ஆம் திகதி கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் ஆலயத்திற்கு சென்று வழிபட அனுமதிக்கப்பட்டது.
ஆனால், மறுநாள் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி, இராணுவம் மீண்டும் தடையை விதித்தது.
மீண்டும் அனுமதி வழங்கப்பட்டாலும், உத்தியோகபூர்வ அனுமதி இல்லாதமையால், எந்நேரமும் மீண்டும் தடைகள் விதிக்கப்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்நிலையில், திருவிழா காலம் நெருங்கி வரும் நிலையில், மக்கள் ஆலய சூழலை துப்புரவு செய்து விழா ஏற்பாடுகளில் ஈடுபட்டாலும், ‘எப்போது மீண்டும் தடைகள் வரும்’ என்கிற பயத்துடன் செயல்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும், அமையாத நேர கட்டுப்பாடுகள், திருவிழா நிகழ்வுகளை முழுமையாக நடத்த முடியாத சூழலை உருவாக்கி விட்டதாகவும், இந்த கட்டுப்பாடுகளை முற்றாகத் தளர்த்தி, மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கவேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் இராணுவத்தினரிடம் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

