இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தில் இன்று நடைபெறும் முக்கியக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
எனினும், இந்த சந்திப்பில் இலங்கைத்தமிழரசுக் கட்சி பங்கேற்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு எழுத்து மூல அழைப்பை அனுப்பியிருந்தார்.
அந்தக் கடிதத்தை முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நேரடியாக சிவஞானத்திடம் கையளித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இருப்பினும், பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச் செயலாளர் இடையே நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலுக்கு பின்னர், அந்த சந்திப்பில் பங்கேற்காது என கட்சி தீர்மானித்துள்ளது.
மேலும், யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் முடிவில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை குறித்த சந்திப்பில் பங்கேற்குமாறு கஜேந்திரகுமார் அழைத்திருந்தாலும், கட்சியின் மையத் தீர்மானத்திற்கே இணையாக செயற்பட முடியும் என சிறிதரன் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

