யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில், இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது பகுதியில் அகழ்வுப் பணிகள் இன்று (ஜூலை 21) ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் பரிந்துரைகள் மற்றும் சமர்ப்பணங்களை ஆய்வு செய்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், இத்தொடர்பான அகழ்வுப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 15 நாட்களுக்கு அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளன. இதற்கு முன் நடைபெற்ற இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதி அகழ்வின் போது, 63 எலும்புக்கூடுகள் முதல் புதைகுழியில் மற்றும் 2 எலும்புக்கூடுகள் அடுத்த புதைகுழியில் என மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் சிறார்கள் மற்றும் பெண்களின் எலும்புகளும் அடங்கியுள்ளன.
மேலும், பிளாஸ்டிக் பொம்மை, புத்தகப்பை உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், இப்பகுதியில் குற்றச்செயல் இடம்பெற்றுள்ளதாகத் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் புதிய கட்டத்தில் இன்று ஆரம்பமாகுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

