தற்போதைய ஜனாதிபதியும் இனப்படுகொலையாளியே; அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது’ என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுவிக்கக்கூடிய தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் திடுக்கிடும் கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் தொடர்ந்தும் கூறியதாவது:
சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள், தமிழ் இனப்படுகொலைக்கு சூழ்நிலை ஏற்படுத்தி, அரசியல் வாதிகள், பௌத்த துறவிகள், அடிமட்ட மக்களை ஏவி, 1983ஆம் ஆண்டு ‘கருப்பு ஜூலை’ நிகழ்வை வழிநடத்தினர்.
அதனைத் தொடந்து 42 ஆண்டுகளாக தொடர்ச்சியான இனப்படுகொலை நடைபெற்று வருகிறது.
‘இனப்படுகொலை நடந்ததில்லை’, ‘சமூக புதைகுழிகளை தோண்ட தேவையில்லை’ என தெரிவிப்பது, இந்த இனப்படுகொலையை மறைக்கும் முயற்சியாகும்.
இது உண்மை, நீதிமுறை, பௌத்த தர்மம் என அனைத்தையும் புதைக்கின்ற செயலில் இணைந்து செயல்படுவதை காட்டுகிறது.
1980ஆம் ஆண்டு தொழிலாளர் வேலை நிறுத்தத்தை அடக்கிய ஐக்கிய தேசியக் கட்சி, 1983இல் இன அழிப்பு நாடகத்தை நிகழ்த்தியதோடு, தமிழ் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்ததையும், சிங்கள இளைஞர்களை தமிழர்களுக்கு எதிராக திருப்பியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர் வாழும் வடக்குக் கிழக்கைத் தவிர நாட்டின் பிற பகுதிகளில் தமிழர்களின் பொருளாதாரமும், வாழ்வுரிமையும் அழிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அரசாங்க வளங்களும், பாதுகாப்பு படைகளும் இந்த இனப்படுகொலை செயற்பாடுகளில் நேரடியாக பங்கு பெற்றிருந்தன.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை உச்சத்தை எட்டின போதும், அதில் திருப்தியடையாத சிங்கள பேரினவாதம் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.
‘ஒரு தடவை புத்த பெருமான், மரணம் இல்லாத வீடில் இருந்து ஒரு பிடி எள் கொண்டு வாருமாறு கேட்டார்.
அதுபோன்று, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம், தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை நடக்காத கிராமத்திலிருந்து ஒரு பிடி நெல் கொண்டு வரச் சொல்லுங்கள்.
முடியாது. காரணம் – அவர் தானே இனப்படுகொலையாளர்!’ எனக் கடுமையாக கண்டித்தார்.
1983 கறுப்பு ஜூலை மாத்திரமல்ல, இலங்கையின் சுதந்திரமும், அரசியல் யாப்பும், ஆட்சி அமைப்புகளும் அனைத்தும் தமிழர்களுக்கெதிரான பேரினவாத கருப்பே என அவர் கூறினார்.
அத்துடன், ஐ.நா மனித உரிமை பேரவையும், சர்வதேச சமூகமும் இலங்கை அரசுக்கு முண்டு கொடுத்துவதை நிறுத்தி, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி, தமிழர்களுக்கான அரசியல் நீதியை வழங்குமாறு வலியுறுத்தினார்.
’75 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு நடந்தது இனப்படுகொலையேயாகும்; இனி மறுக்க முடியாத உண்மை. சர்வதேச நீதியே இந்தக் கொடூரத்திற்கு தீர்வு காணவேண்டும்’ எனத் தெரிவித்தார்.

