செம்மணி மற்றும் ஏனைய மனிதப் புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் எனக் கோரி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும், பல வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்த கோரிக்கைகள் முறையாக வலியுறுத்தப்பட்டன.
தமிழ் ஏதிலிகள் பேரவை வெளியிட்ட அறிக்கையில், இலங்கை அரசால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டமை மீண்டும் செம்மணி புதைகுழிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தெரிவித்தது.
இவை தனிப்பட்ட சம்பவமாக இல்லாது, தொடரும் அமைதியான இனப்படுகொலையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன.
அவுஸ்திரேலியாவில் ஐநா தூதரகத்திற்குமுன் ஆரம்பமான இந்த பேரணி, பிற தூதரகங்களையும் நோக்கி நகர்ந்தது.
இதில் பங்கேற்றவர்கள், சர்வதேச சமூகத்திடம் உறுதியான நடவடிக்கை, நீதி மற்றும் பாதுகாப்புக்கான கோரிக்கைகளை மகஜராக வழங்கினர்.
செம்மணியைச் சுற்றி சர்வதேச விசாரணையைத் தொடங்கவேண்டும், ஐநாவின் செப்டம்பர் அமர்வில் இலங்கையை பொருத்த ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும், இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பயணத்தடை விதிக்கப்படவேண்டும், முக்கிய சாட்சிகளுக்கும் உயிர்தப்பியவர்களுக்கும் பாதுகாப்பும் புகலிடமும் வழங்கப்பட வேண்டும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க அழுத்தம் தரப்பட வேண்டும், மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
‘ஒவ்வொரு புதைகுழியும் நீதிக்கான உங்கள் பதிலை எதிர்நோக்குகிறது’ எனத் தமிழ்ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார்.

