திருகோணமலை மாவட்டம் சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவின் பேரில், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றிடம் வரும் 30ஆம் திகதிக்குள் அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.
நீதிபதி இன்று சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு, மிதிவெடி அகற்றும் நிறுவனத்தினருடன் கலந்துரையாடியதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் அகழ்வுப் பணிகளை மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் ஒருங்கிணைக்கவும், தொல்பொருள் திணைக்களத்திடம் அங்கு மயானம் இருந்ததா என்பதை ஆராய்ந்து அறிக்கை தருமாறும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், அரச பகுப்பாய்வு திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய சாட்சிகள் அலுவலகம் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்து பார்வையிட்டனர்.
சம்பூர் சிறுவர் பூங்கா அருகே கடற்கரையில், மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுபு நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது (20-07) மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகளை கண்டெடுத்தது.
இதையடுத்து, பதில் நீதிபதி எம்.எம். நஸ்லீம், அகழ்வுப் பணியை 23ஆம் திகதி வரை இடைநிறுத்தி, அதன்பின்னர் மேலதிக திணைக்களங்களின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை (23) அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
சம்பவ இடத்திற்கு இன்று அனைத்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும் வருகை தந்து பணியில் ஈடுபட்டனர்.
பொலிஸாரும் பாதுகாப்பு பணிக்காக களத்தில் இருந்தனர். தற்போதும் அந்த பகுதி பொலிஸ் பாதுகாப்பில் இருப்பதால் பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இரு தரப்புகளும் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைகளைத் தொடர்ந்து, எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

