செம்மணி மனித புதைகுழி தமிழர்களின் கருவைக்கூட அறுக்கும் அளவிலான பயங்கரமான செயலை எடுத்துக்காட்டுகிறது என்பதைக் கவனித்தல் அவசியம் எனத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் என பலரும் புதைக்கப்பட்டுள்ளமை, குறிப்பாக தாயின் கருவிலேயே கருவைக்கூட அழித்தமை, தமிழின அழிப்புக்கான உயிர் சாட்சியாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், உள்ளக விசாரணைகள் தோல்வியடைந்துள்ளன என்பதையும், அதனூடாக வெளியான தகவல்கள் போலியானவையாக இருந்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை என்றார்.
அதனால், சர்வதேச நியமனங்கள் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடன், செம்மணி புதைகுழி மற்றும் தமிழினப் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் எங்கு தோண்டினாலும், திட்டமிட்ட முறையில் தமிழர்கள் அழிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.

