வடக்கு மாகாணம் செம்மணி பகுதியில் 2025 மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை 85 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் நான்கு அல்லது ஐந்து வயதுடைய பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன.
இது எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையின் மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் பெறுகிறது.
முன்னதாக மூன்றாவது பெரிய புதைகுழியாக இருந்தது மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2023ல் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி.
அங்கு 82 எலும்புக்கூடுகள் அகழப்பட்டது.
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் 18 நாட்கள் நீடித்த இரண்டாம் கட்ட அகழ்வாய்வில், நேற்று (ஜூலை 23) மட்டும் ஐந்து புதிய மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்தார்.
இதுவரை மொத்தம் 67 மண்டையோடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னார் சதொச பகுதியில் அமைந்தது.
அங்கு 28 சிறுவர்கள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
2013ஆம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பகுதியில் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்பட்டது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 82 எலும்புகள் மீட்கப்பட்டதால் அது இப்போது நான்காவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது.
கொக்குத்தொடுவாய் பகுதியில் 52 எலும்புகளுடன் அகழ்வு நிறைவடைந்தது.
2024 ஜூலை 13ஆம் திகதி கொழும்பு துறைமுக அதிவேக வீதி வேலைகளில் மனித எச்சங்கள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது வரை அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை.
இவ்வாறு நாடு முழுவதும் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில், கடந்த ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான விசாரணைகளை அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது

