நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதிக்கு மணல் வழங்க இடர்ப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சரித்திரப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு, அடியவர்களின் நலனுக்காக வீதிகளில் மணல் பரப்புவது வழமையாகும் என கூறியுள்ளார்.
ஆனால், இந்த ஆண்டு மணல் பெறுவதில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இதுவரை மணல் வழங்கப்படவில்லை என்ற செய்தி கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்கப்பிரதட்சணம், அடியடித்தல் போன்ற நேர்த்திகளை நிறைவேற்றும் திருவீதிகள் தார்வீதியாக உள்ளன.
எனவே, உடனடியாக மணல் வழங்கும் ஏற்பாடுகளை உரிய பொறுப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இக்கோரிக்கையை முன்னிட்டு, வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரச அதிபர், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்டவர்கள் துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டைய காலம் தொட்டே நான்கு வீதிகளிலும் புதிய மணல் பரப்பி பன்னீர் தெளித்து நடைபெறும் தெய்வீக விழாவின் சிறப்பை பாதுகாக்க அனைவரும் தங்களது கவனத்தையும் செயல்பாட்டையும் வழங்க வேண்டும் எனவும், இந்து சமய திணைக்களம் மற்றும் சமய விவகார அமைச்சு இதுபோன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆயிரம் மக்கள் கூடி பங்கேற்கும் இந்த திருவிழாவின் ஒழுங்கு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்புணர்வுடன் அனைத்து அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்பதையும், இந்த கோரிக்கையை சைவ மக்களின் சார்பில் அனைவரது கவனத்திற்கும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

