மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் வீதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவரின் வீட்டில் நேற்று மாலை 4.30 மணியளவில் முகமூடியுடன் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை வீட்டில் தனிமையில் இருந்த வேளை, வீட்டின் பின்புற வேலியின் வழியாக வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கத்தியை காட்டி மிரட்டி ஆசிரியையின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகிறது.
திருடன், ஆசிரியையின் கைகளில் அணிந்திருந்த வளையல்களையும் பறிக்க முயன்றுள்ள நிலையில், அவற்றை கழற்ற முடியாமல் போனதால் அவர் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதாக கூறப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய தகவல் முருங்கன் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
முகமூடியுடன் செயல்பட்ட இந்த கொள்ளையன், சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முருங்கன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

