முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் உள்ள அரசு வீட்டு திட்டத்திலுள்ள கிணற்றிலிருந்து தாய் மற்றும் இரு பிள்ளைகளின் சடலங்கள் இன்று (24) வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 38 வயதான தாயும், 11 வயதான மகனும், 4 வயதான மகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பனிக்கன்குளம் கிராமத்தில் வசித்து வந்த இந்த குடும்பத்தினர், தங்களது வீட்டு வளாகத்திற்கு சுமார் 500 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த அரசு வீட்டு திட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.
காலை நேரத்தில் குறித்த கிணற்றருகே கைப்பை மற்றும் பிற பொருட்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து கிராம மக்கள் அந்த விவரத்தை கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸாரும் கிராம அலுவலரும், கிணற்றில் சடலங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர், சடலங்களை மீட்டு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி, உடற்கூற்று பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது வேறு காரணமா என்பது தொடர்பாக மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

