கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பரின் விருந்துபசார நிகழ்வு, இன்று அக்கரைப்பற்று பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, கலந்து சிறப்பித்தார்
நிகழ்வில் கல்முனை சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு வி. ராம கமலன், கல்முனை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஜே. ட்ரொட்ஸ்கி, மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஏ.எம்.எம். றியாழ், நீதவான் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு எம்.எஸ்.எம். சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், முன்னாள் தலைவர்கள், செயலக உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சிரேஸ்ட சட்டத்தரணிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் கல்முனை சங்கத்திற்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறினர்.
சட்டத்தரணிகளின் நலனோம்புகை, பரஸ்பர பரிந்துரைகள் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பு தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சங்கத் தலைவர் ரஜீவ் அமரசூரிய, தனது பல்கலைக்கழக கால தோழியான ஆரிக்கா காரியப்பரின் ஆளுமையும் திறமையும் குறித்து பாராட்டு தெரிவித்ததுடன், நாட்டின் நீதித்துறையில் சட்டத்தரணிகள் வகிக்கும் பங்களிப்பு குறித்து பேசினார்.
நிகழ்வின் நினைவாக இருவருக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், பொன்னாடையும் போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

