கல்விச் சீர்திருத்தம் என்பது வெறுமனே புதிய பாடப்புத்தகங்களை அறிமுகப்படுத்துவது அல்ல, மாறாக ஒட்டுமொத்த கல்வி முறைமையையும் மாற்றியமைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
‘வளமான நாட்டுக்காக பெண்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக’ எனும் தலைப்பில், இரத்தினபுரி நகர மண்டபத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், கல்வி முறைமை பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் சுமையாக இருக்கக் கூடாது என்றும், இது தமது அரசியல் இயக்கத்தில் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட விடயமாகவும், தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இடம்பெற்றுள்ளதெனவும் குறிப்பிட்டார்.
பரீட்சை மையமாக உள்ள தற்போதைய கல்வி முறை சிறார்களுக்கு, பெற்றோர்களுக்கும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும், அதனால் சமூகத்தில் எதிர்மறையான விளைவுகள் உருவாகியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வி சீர்திருத்தத்தின் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு விடையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்தகால அரசாங்கங்கள் கல்வியைப் பற்றிப் பெருமையாக பேசியிருந்தாலும், அரசியல் தீர்மானங்களை செயல்படுத்துவதற்காக கல்வியை பயன்படுத்தியதால், கல்வித்துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும், சில அரசியல்வாதிகள் கல்வித் தரம் தொடர்பான கவனத்தை மீறி ‘தேசிய பாடசாலை’ என்ற பெயர்ப்பலகைகளை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், கடந்த அரசாங்கங்கள் கல்விக்கான வரவு–செலவுத் திட்ட ஒதுக்கீட்டைக் குறைத்து, சுமையை பெற்றோரின் மீது சுமத்தியதுடன், ஆசிரியர் மற்றும் கல்வி நிர்வாகத்தில் உள்ளவர்களின் தொழில்சார் வளர்ச்சியை புறக்கணித்து, பாதகமான துறைகளை வளர்ச்சியடையச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். கல்வி முறைமையை மேம்படுத்த தேவையான மனிதவளங்கள், அடிப்படை வசதிகள், முதலீடுகள் வழங்கப்படாமை காரணமாக கடந்த சீர்திருத்தங்கள் முழுமையான வெற்றியை அடைய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
இம்முறை திட்டமிட்ட முறையில் சமூக கலந்துரையாடல்களை ஏற்படுத்தி, தேவையான கட்டமைப்புகள், கருத்துமாற்றங்கள் உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு உண்மையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதற்கான பொறுப்பு அனைவருக்குமே உண்டு எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலுஷா லக்மாலி, நகர மேயர் இந்திரஜித் கட்டுகம்பொல, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

