யாழ்ப்பாணத்தில் முறையற்ற கழிவகற்றல் மற்றும் நிர்வாகம், சூழலியல் உயிரினங்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது என்று யாழ் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார்.
சரசாலை குருவிக்காடு, நாகர்கோயில் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகள் வெளிநாட்டு பறவைகள் உள்ளிட்ட அரிய உயிரினங்கள் வாழும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளாக உள்ளன.
இப்பகுதிகளில் தொடர்ந்து தடுக்க முடியாத வகையில் கழிவுகள் கொட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, குடிச் தொகை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், ஏற்கெனவே சவாலான நிலையில் உள்ள கழிவகற்றல் நடவடிக்கைகள், முறையான பொறிமுறைகள் இல்லாமல் மிக மோசமாக நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தின் பல பகுதிகளில் கழிவுகள் வீதிகளில் வீசப்படுவதும், எரியூட்டப்படுவதும் சட்ட விரோதமாகும்.
இந்நிலையில், விலங்குகள் மற்றும் பறவைகள் அவற்றை உணவாக நினைத்து உண்ணும் நிலையில், அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
அண்மையில் நெடுந்தீவில் சில குதிரைகள் இறந்து கிடந்ததை ஆய்வு செய்தபோது, அவற்றின் வயிற்றில் பொலித்தீன் பைகள் காணப்பட்டன.
இது, தவறான கழிவகற்றல் முறைகள் உயிரினங்களுக்கு ஏற்படுத்தும் விளைவுகளை வெளிப்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்
சூழல் பாதுகாப்பு குறித்து தெளிவான அறிவு இல்லாமல் கழிவகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவது மனிதர்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒரு உயிரினத்தின் இயல்பு பாதிக்கப்பட்டாலே அந்தச் சூழலின் முழுமையும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து, முறையான கழிவு முகாமைத்துவம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என பேராசிரியர் கணபதி கஜபதி வலியுறுத்தினார்.

