உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சி – அருட்தந்தை மா.சத்திவேல்

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும். பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் நலமே வாழ வேண்டும் என்பதோடு; இயற்கையும் சுற்றுச்சூழலும் தன் நிலை கெடாத வகையில் மனிதன் வாழ வேண்டும் என்பதே அனைத்து சமயங்களில் போதனையாகும்.
அதனை காக்கவே புத்தரும், இயேசுவும் நீதி வாழ்வுக்கான அறைகூவல் விடுத்தனர். வலுவான மக்கள் சக்தியையும் உருவாக்கினர்.
ஆனால் அவர்கள் பெயரால் இன்று கட்டியெழுப்பப்பட்டுள்ள சமய நிறுவனங்கள் தான் நிலை பிறழ்ந்து இனவாத நோக்கில் இலங்கையில் செயல்படுவது சமய தர்மத்தையும், நீதியையும், உண்மையும் சமூக புதைகுழிகளுக்குள் தள்ளுவதாகவே தோன்றுகின்றது.

செம்மணி சமூக புதைகுழி இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளது என்பதற்கான சாட்சியாகும்.
இதுவரை நூற்றுக்கதிகமான மனித எச்சங்கள் முழுமையாகவும் பகுதி பகுதியாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆண்கள்,பெண்கள் என பலருடையதாக சந்தேகிக்கப்படும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு விசேடமாக குழந்தைகள் பாவிக்கும் பால் போத்தல், பாடசாலை சிறுவர்களின் புத்தகப் பை, உடைகள் உட்பட பல சான்று பொருட்களும் வெளிவந்திருப்பதன் மூலம் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவருகின்றது.

கிரிசாந்தி குமாரசாமி கொலை வழக்கில் சாட்சியான சோம ரத்தின ராஜபக்சரின் கூற்றின்படி பல நூறு பேர் அநியாயமாக கொல்லப்பட்டு குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அல்லது உயிரோடு குழிகளுக்குள் தள்ளி கொன்று மண்ணில் மறைத்துள்ளனர்.

இதற்கு நீதி கேட்டு வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல தலைநகரான கொழும்பிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
அல்ஜஸீரா போன்ற சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்த நிலையில் தெற்கின் பிரதான சிங்கள ஊடகங்கள் இவ்விடயம் தொடர்பில் பேசாதிருப்பது இனவாத நோக்கில் என்பது நாம் அறிந்ததே.
பட்டலந்த விடயம் அல்ஜசீரா ஊடகத்தில் வெளி கொண்டு வந்த போது இவ் ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் செம்மணி விடயத்தில் மௌனம் காப்பது; கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலும் கொலையாளிகள் சிங்கள படையினர் என்பதாலுமே.

ஆனால் சமய அறம் காக்க உருவாக்கப்பட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் அதன் தலைமைத்துவங்களும் அமைதி காப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நடைபெற்ற இனப்படுகொலை யுத்தத்துக்கும் படைவீரர்களுக்கும், ஆயுதங்களுக்கும் ஆசி வழங்கிய சமய தலைமை தலைமைகளிடமிருந்து நாம் நீதியை எதிர்பார்க முடியாது.

உயிர்ப்பு தின குண்டு வெடிப்புக்கும், அதில் கொல்லப்பட்டோருக்கும் நீதி கேட்டு ஜெனிவா வரை சென்றவரும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கின்ற வருமான கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்கள் ஒரு பால் திருமணம் மனித உரிமை சார்ந்தது அல்ல.

அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. சமயத்திற்கு எதிரானது என எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார்.ஆனால் இனப்படுகொலையின் அடையாளமான செம்மணி தொடர்பில் வாய் திறக்காத உள்ளமை கத்தோலிக்க திருச்சபையின் பிளவுபட்ட தன்மையையும் இனவாதத்தையுமே வெளிப்படுத்துகின்றது. அதன் அடையாளமாகவே கொழும்பு பேராயர் காட்சி தருகின்றார். இதற்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் நீதியின் மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதுவே இறை நீதியாகும்.

அதுமட்டுமல்ல கொழும்பை தலைமையகமாக கொண்ட ஏனைய கிறிஸ்தவ அமைப்புகளும் அதன் நிறுவனங்களும் அதன் தலைமைகளும் இனப்படுகொலை தொடர்பில் கருத்து கூறாதிருப்பது இனவாத தற்காப்பு நிலையே.

இன, மத, பிரதேச வாதத்தை பாதுகாத்து முதலாளித்துவத்திற்கு பணி புரியும் சமய தலைமைகளும் அவர்களின் தலைமையில் இயங்கும் சமய நிறுவனங்களும் சமூகத்திற்கு சாபமே. சாதனை நீதியின் மக்கள் இதற்கு எதிராக எழும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஒடுக்கப்பட்டோருக்கான நீதிக்கான மக்கள் எழுச்சி இறை நீதி சமயங்களின் வாழ்விடம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு சிலாவத்தை சந்தைக்கு முன்பாக அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றும் அதனுடன்