நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று ( ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெளிநாடுகளுக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாக அவர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணை நேற்றைய தினம் (28) மீண்டும் அழைக்கப்பட்டபோது நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மாலைத்தீவு விஜயத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று காலை 11.30 மணியளவில் மாலேயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர், சிறப்பு விருந்தினர் அறை வழியாக மதியம் 12.30 மணியளவில் விமான நிலையத்தைவிட்டு வெளியேறினார்.
பிடியாணை தகவலை அறிந்த நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் முன்னதாகவே வந்திருந்தது.
இந்நிலையில், ஹம்பாந்தோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகியதையடுத்து, அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக நீதிமன்றத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

