வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று ( காலை யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தாம் தெரிந்துகொள்வதே இந்தப் பயணத்தின் நோக்கமென தூதுவர் தெரிவித்தார்.
வடக்கில் இன்னும் பின்தங்கியுள்ள கிராமங்களில் வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
போருக்குப் பின்னர் தொழிற்சாலைகளின் பற்றாக்குறை வேலைவாய்ப்பை சவாலாக மாற்றியுள்ளதாகவும் கூறினார்.
விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் வளம் இருந்தாலும், பெறுமதிசேர் தொழிற்சாலைகள் இல்லாததால் மூலப்பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்படுகின்றன என தெரிவித்த ஆளுநர், அவை இங்கேயே மாற்றப்பட்டால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நிலையான விலை இல்லை என்பதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், அதைச் சரிசெய்யவும் தொழிற்சாலைகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.
போருக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட ஏற்று நீர்பாசன முறைகளை மீண்டும் ஊக்குவிக்க வேண்டியதையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
பலாலி – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் குறித்தும், கட்டுநாயக்கா – பலாலி இடையிலான இணைப்பு விமான சேவைக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதையும் அவர் தெரிவித்தார்.
தூதுவர், வடக்கு – கிழக்கு பொருளாதார மேம்பாட்டுக்காக முதலீடுகள் அவசியம் என வலியுறுத்தினார்.
இலங்கை முதலீட்டுச் சபையால் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், அவற்றின் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட்டுவருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஊழலினால் முதலீட்டாளர்கள் பின்வாங்கியிருந்தபோதிலும் தற்போது மீண்டும் முன்வருவதாகவும் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, அதற்கான இணைப்பு வீதிகள், இறங்குதுறைகள் புனரமைப்பு உள்ளிட்ட பணிகள் அவசியம் எனவும், திருவிழாக் காலத்தில் மற்றும் விடுமுறைகளில் உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்திருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
அரசாங்கம் வடக்கு – கிழக்கு அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், கொழும்பு மைய திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பில் சவால்கள் இருப்பதாகவும் கூறினார்.
கடந்த காலத்தை விட மூன்று மடங்கு நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துக்காட்டினார்.
மேலும், உள்ளூராட்சி மன்றங்கள், செம்மணி புதைகுழி, தையிட்டி திஸ்ஸவிகாரை, மீள்குடியேற்பு, சிவில் நிர்வாகத்தில் இராணுவ தலையீடு, மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்தனர்.
மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்த கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆளுநர் விளக்கியுள்ளார்

