உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது என்றும், தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் அமைப்பு புறந்தள்ளுகிறது என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் உள்ள பழைய பேருந்து நிலையப்பரப்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில்,
உள்ளக விசாரணை முறையைத் தொடர்ந்து நிராகரித்து வருகிறோம்.
இருப்பினும் அதையே மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரை செய்கிறார்.
இனப்படுகொலை இடம்பெற்ற ஒரு நாட்டில், அதனை மேற்கொண்டவர்களே இன்னும் பதவியில் இருக்கின்ற நிலையில், அவர்கள் மீது உள்ளக முறையில் விசாரணை நடப்பது எப்படி சாத்தியமாகும் என எங்களுக்கு புரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நாட்டில் குற்றவாளிகள் உயர் பதவிகளில் இருந்து கௌரவிக்கப்படுகிறார்கள்.
இது நீதி வழங்கப்படுவதற்கான தடையாகவே உள்ளது.
தற்போது தாயகப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள், இங்கு இனப்படுகொலை நடந்ததற்கான நேரடி சாட்சிகளாகும்.
இவற்றை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை சர்வதேச விசாரணைதான் உறுதிப்படுத்தக்கூடியது.
இதனை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அவர்கள் அறிவித்தனர்.

