திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் அகழ்வுப் பணியை மேற்கொள்வது தொடர்பாக வழக்கு மாநாடு ஒன்றை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதற்காக சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு, மாநாட்டில் பங்கேற்க வேண்டியவர்களுக்கு அழைப்பு விடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கானது நீதிமன்றத்தினால் முன்பே வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இன்று அழைக்கப்பட்டதுடன், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் திணைக்களத்திடம் அறிக்கைகள் கோரப்பட்டிருந்தன.
நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்து மேலதிக தீர்மானங்கள் எடுக்க நடவடிக்கை எடுத்தார்.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில், கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் நீண்ட காலத்திற்கு முந்தையவை எனவும், அவை காயங்களால் ஏற்பட்ட மரணமா அல்லது இயற்கை மரணமா என்பதையும் உறுதி செய்ய மேலதிக ஆய்வு தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கையில், சம்பவ இடம் மயானமாக இருந்ததற்கோ அல்லது தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்ததற்கோ எந்தத் துல்லியமான ஆதாரங்களும் இல்லை என தெரிவித்தனர்.
சம்பூரில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை அண்மித்த கடற்கரை பகுதியில், “MAG” என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் கடந்த 20ஆம் திகதி அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 23ஆம் திகதி சம்பவ இடத்தை நீதிபதி மற்றும் பல துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அதன்போது மேலும் பல மனித எச்சங்கள், அடங்கியுள்ள எலும்புகள் மீட்கப்பட்டன.
இந்தநிலையில், அகழ்வுப் பணியை தொடங்குவதற்கான முடிவை எடுக்க வழக்கு மாநாடு நடத்தப்பட உள்ளதோடு, அதற்கான அழைப்புகளைச் சம்பூர் பொலிஸ் நிலையம் அனுப்ப வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

