ரஸ்சியாவின் கம்சட்கா தீபகற்ப பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம், பெட்ரோ பாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்க் நகரத்திலிருந்து சுமார் 136 கிலோமீட்டர் தொலைவில் மையமாகக் கொண்டது.
அதின் தாக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி, மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
வீடுகளில் உள்ள பொருட்கள் தரையில் சரிந்து விழுந்தன் ஜன்னல்கள் உடைந்தன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
துரிதமாக மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து, ரஸ்சியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பின்னர், சுனாமி அலைகள் கம்சட்கா கடற்கரையை மோதி தாக்கின.
சுமார் 4 மீட்டர் (13 அடி) உயரத்தில் அலைகள் எழுந்தன.
குறிப்பாக குரில் தீவுகளில் உள்ள பரமுஸிர் தீவில் அமைந்த செவெரோ-குரில்ஸ்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடலிலிருந்து எழுந்த ராட்சத அலைகள் ஊருக்குள் புகுந்து, கட்டிடங்களை சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடற்கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். குரில் தீவுகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஜப்பான், அமெரிக்காவின் ஹவாய் தீவுகள், அலாஸ்காவின் அலூடியன் தீவுகள், பசிபிக் பெருங்கடல் பகுதிகள், கனடா, ஆஸ்திரேலியா, சிலி, கோஸ்டாரிகா, பெரு, ஈக்வடார், மெக்சிகோ, நியூசிலாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஜப்பானில், ஹொக்கைடோவின் வடக்குப் பகுதியில் சுமார் 2 அடி உயர சுனாமி அலைகள் எழுந்தன.
இஸினோமாகி பகுதியில் 1.6 அடி உயரத்தில் அலைகள் பதிவானது.
ஹமனகா நகரம் மற்றும் இவாட்டில் உள்ள குஜி துறைமுகம் தாக்கப்பட்டுள்ளது.
ஒசாகாவை அடையும் வகையில் தெற்கே வகயாமா வரைக்கும் சுனாமி அலைகள் எழுந்து தாக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை ஒலிகள் ஒலிக்க, மக்கள் வீட்டு மாடிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரத்திலுள்ள சுமார் 9 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
ஹொக்கைடோ முதல் தெற்கில் ஒகினாவா வரை 133 நகராட்சிகளில் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா, ஒரிகான், வாஸிங்டன், பிரிட்டிஸ் கொலம்பியா, தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பம் வரையிலான கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
சுனாமி அலைகள் 4 மணி நேரத்தில் கலிபோர்னியாவைத் தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டதால், மக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
அலாஸ்கா கடற்கரையில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்பட்டன.
மேலும், ஜப்பான்-ஹவாய் இடையே உள்ள மிட்வே அட்டோல் பகுதியில் 6 அடி உயரத்தில் அலைகள் எழுந்தன.
சுனாமியால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. நில அதிர்வுகள் தொடரும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம், கடந்த 2012ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ராவில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் நிலநடுக்கத்துக்கு பின்னர் இத்தகைய சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.
உலகில் பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் முதல் 10 இடங்களில் இந்நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

