பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவரவும் முக்கிய வாய்ப்பை அளிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தை எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சி உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்
தமிழர்களுக்கு நீதி, உண்மை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்கள், கடந்த ஒரு தசாப்தமாக தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற அரசின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர்.
குறிப்பாக, யுத்தத்தின் இறுதி மாதங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், இது தொடர்பான பல்வேறு அறிக்கைகள் 40,000 பேர் வரை கொல்லப்பட்டதாகக் குறிப்பிடுகின்றன.
இது கூட, நிபுணர்களின் கருத்துப்படி குறைத்த மதிப்பீடாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இலங்கை அரசாங்கம் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியதும், சட்டவிரோதமாக கொலை செய்ததும், பாலியல் வன்முறைகள், காணாமல் ஆக்கங்கள், சித்திரவதை, மருத்துவம் மற்றும் உணவின்றி தமிழர்களை முகாம்களில் அடைத்திருந்ததும் ஆவணங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழிகள், யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை மேலும் உறுதிப்படுத்துவதாகவும், கடந்த 80 ஆண்டுகளாக தமிழர்கள் நிலையான அமைதியுடன் வாழ முடியாத சூழ்நிலை தொடருவதாகவும் பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழர்களின் நீதி கோரல் தொடர்ந்து நிலவி வரும் போதும், இதுவரை சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய புதைகுழிகள், இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டிருப்பதை வெளிக்கொணர்கின்றன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும் என்றும், பிரான்ஸ் உண்மையான நீதி செயல்முறைகளை ஆதரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
பிரான்சில் வாழும் 2,20,000 தமிழ் வம்சாவளி மக்களில் பெரும்பாலோர் 1980களில் இலங்கையிலிருந்து போரினால் இடம்பெயர்ந்தவர்கள் என்பதையும், அவர்களும் உலகெங்கும் உள்ள தமிழர்களைப் போலவே உண்மை, நீதி மற்றும் இழப்பீட்டை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இக்கூட்டு பிரகடனத்தில் டுகுஐ-NடுP கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கார்லோஸ் மார்டென்ஸ் பிலோங்கோ, எரிக் கோக்வெரல், அலி டியோரா, தாமஸ் போர்டெஸ், பெர்செவல் கெய்லார்ட் மற்றும் ஜீன்-ஹியூஸ் ரேட்டன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

