யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் ஒன்றை நிறுவும் முயற்சி தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாக சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் அறிவித்துள்ளார்.
சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்றதாகவும், அதில் இவ்விடயம் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கந்தரோடை பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் பௌத்தர்கள் தொடர்ந்து பார்வையிட்டு வருவதாகவும், பிக்கு ஒருவர் தனியாரிடமிருந்து காணியை வாங்கி பௌத்த மத்திய நிலையம் ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்படும் வகையில் ஒரு பெயர்பலகை அந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சட்டவிரோதமான இந்த கட்டட நடவடிக்கையை எதிர்க்கும் முயற்சியாக, கட்டுமானத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதையும் தவிசாளர் விளக்கியுள்ளார்.
மேலும், அந்த இடத்தில் தமிழ் பௌத்தம் இருந்தது குறித்து பேசப்படும் போதிலும், அதன் பின்னணியில் இந்துமத மற்றும் சைவ மத வரலாற்றை மறைக்கும் நோக்கோடு கருத்துகள் பரப்பப்படுவதாகவும், இது மிகப்பெரிய தவறு எனவும் அவர் கூறினார்.
அப்பகுதியில் தற்போது ஒரு வெளிநாட்டு நிறுவனம் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அருகிலுள்ள காணிகளில் சுமார் மூன்று அடி உயரமுள்ள கிருஸணர் சிலை கிடைத்ததும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதேபோல் தையிட்டியில் நடந்த பௌத்த மயமாக்கல் போலவே, இப்போதும் அரசாங்கம் மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் அனுசரணையுடன் கந்தரோடையில் பௌத்த மயமாக்கல் திட்டமிடப்படுவதாக சந்தேகம் எழுகிறது.
இதனை வலிகாமம் தெற்கு பிரதேச சபை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், எதிர்ப்பு நடவடிக்கையாக நீதிமன்றத்தில் செல்ல தயாராக உள்ளதாகவும் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் வலியுறுத்தியுள்ளார்.

