செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி அடையாளம் காணும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 5, 2025 அன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில், இந்த பொருட்கள் செம்மணி அகழ்விட வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.
இவை தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் நீதிமன்றத்திற்கோ அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முயற்சி இலங்கையில் குற்றம் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் நடக்கும் முதல் நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இந்த அனுமதி, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
மனித எலும்புகளுடன் மீட்கப்பட்ட பிற பொருட்களில் குழந்தை பால் போத்தல், சிறுவர்கள் பொம்மைகள், காலணிகள், பாடசாலை பைகள் உள்ளிட்டவை அடங்குகின்றன.
இதுவரை மீட்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டியுள்ளதாகவும், அகழ்வாய்வின் 27ஆவது நாளான ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையிலான நிலையில் 112 எலும்புக்கூடுகள், முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை ; 122 என்புத் தொகுதிகள் அடையாளம் காண முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து புதிதாக அனுமதி பெற தேவையில்லை என்பதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள், மே 15ஆம் திகதி தொடங்கப்பட்டு, பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் தலைமையிலான குழுவால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

