யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வாய்வில், இன்றைய தினம் (ஓகஸ்ட் 4) புதிதாக 5 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனுடன், ஏற்கனவே கண்டறியப்பட்ட 6 தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக கடந்த 15 நாட்களாக இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதியாக நடைபெறும் அகழ்வில், இன்றைய தினம் வரையிலான கணக்கில் 61 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இந்த அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நீதிமன்றம் வழங்கிய 45 நாட்கள் அனுமதியின் கீழ், இன்றைய தினம் 30 ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மொத்தமாக, செம்மணி பகுதியில் இதுவரை 39 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ந்துள்ளன.
இன்றைய தினம் அகழ்ந்தெடுக்கப்பட்ட 6 தொகுதிகளை உள்ளடக்கி, இதுவரை 126 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன் மொத்த அடையாளக்காணப்பட்ட தொகை 135 ஆக உயர்ந்துள்ளது.

