செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழிகள் தொடர்பான அகழ்வு பணிகளை மனித உரிமை ஆணைக்குழு குழுவினர் நேரில் பார்வையிட்டுள்ளனர்.
இக்குழுவில் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தனராஜ், பேராசியர் பாத்திமா பர்ஸான ஹனீபா மற்றும் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் ஆகியோர் அடங்கினர்.
அவர்கள் சமீபத்தில் செம்மணி பகுதியை அணுகி நடைபெற்று வரும் அகழ்வு பணிகளை பரிசோதித்தனர்.
இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்கள், புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் அகழ்வு பணிகள் குறித்த தகவல்களை பெற்றுள்ளோம் என தெரிவித்தனர்.
மேலும், இவ்வகை அகழ்வுகளுக்கு முக்கியமான சாட்சிகளுக்கான பாதுகாப்பு குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையானால் பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளனர்.
1996ஆம் ஆண்டில் இடம்பெற்ற கிருஸாந்தி கொலை வழக்கில் குற்றவாளியான ராஜபக்சே, செம்மணி புதைகுழிகள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கத் தயார் என தெரிவித்துள்ள நிலையில் அவர் சிறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகினால் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மனித உரிமை ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
மேலும், 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைக் குறித்த விசாரணைகளின் அடிப்படையில் 2003ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை, தற்போது மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

