பிரித்தானியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞர் தொடர்பான விசாரணை அறிக்கையின் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023ஆம் ஆண்டு செப்டம்பரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்வான்சி நகரைச் சேர்ந்த 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா, தனது இரு மருமகள்களை காப்பாற்றும் முயற்சியில் நீர்வீழ்ச்சியில் குதித்து உயிரிழந்தார்.
பிரெகான் பீக்கன்ஸ் எனப்படும் சுற்றுலா பகுதியில் அமைந்துள்ள ஸ்க்வட் ஒய் பன்வர் நீர்வீழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்ற மோகன், வானிலை இனிமையாக இருந்த காரணத்தால் சிலர் நீருக்குள் இறங்கிய நிலையில், இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கியதாக அறியப்படுகிறது. இந்த நிலையில், அவர்களை காப்பாற்ற மோகன் நீரில் குதித்தார். அவர் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டதுடன், துரதிர்ஷ்டவசமாக தாமாகவே தண்ணீரில் சிக்கிக்கொண்டு உயிரிழந்தார்.
இவ்விபத்துக்கான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த மரணம் ஒரு விபத்துக்கேற்ப ஏற்பட்டதென அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் பிறந்த மோகன் ஒரு விமானி என்றும், காப்பாற்றப்பட்ட இருவரும் அவரது மருமகள்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோகனின் உடல் சம்பவம் இடம்பெற்ற நாளையடுத்து மீட்கப்பட்டது. அவருடைய தியாகத்திற்காக பலர் ‘ஹீரோ’ என புகழ்ந்து, அவரது நினைவாக நடத்தப்பட்ட இணையவழி நிதி திரட்டும் முயற்சியில் சுமார் 3,000 பவுண்ட்கள் திரட்டப்பட்டன.

