செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் சர்வதேச நியமங்களுக்கு அமைய, உரிய கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் நடைபெற வேண்டும் எனவும், மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கும் உறுப்புநாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்தக் கடிதத்தில், வடகிழக்கு மாகாணங்களில் இயங்கும் தமிழ் கட்சிகள் மற்றும் 115 சிவில் அமைப்புகளுடன், 11 மதத்தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை முன்னிட்டு, இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் பெற்றுத்தர வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட யுத்தத்திற்கு பின்னரும், இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் தக்க முன்னேற்றம் செய்யவில்லை என்பதையும், ஐ.நா இந்த விடயத்தில் தோல்வியடைந்துள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இலங்கை தொடர்பான விடயங்களை ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்பு சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு உள்ளகப் பொறுப்புக்கூறல் அமைப்புகளை உருவாக்க உண்டாக்கப்படும் எந்த வாய்ப்பும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும், சுயாதீன குற்றப்பத்திர அலுவலகம் போதுமானதல்ல என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், ‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் செயற்பாடுகள் பாராட்டப்பட்டுள்ளன.
அதன் கால நீட்டிப்புக்கான ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அது இலங்கை விவகாரங்களை ஐ.நாவின் உயர் அமைப்புகளுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முடிவாக, செம்மணி அகழ்வுப் பணிகளில் சர்வதேச கண்காணிப்பு, தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும், வடகிழக்கில் உள்ள அனைத்து புதைகுழிகளும் சர்வதேச முறைகளின்படி மீள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், இதற்கான முன்னுரிமையை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

