செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் அளவு மிகப்பெரிய பேரழிவாகும் எனவும், அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கும் பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை நாடும் ஒரு குடும்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காக சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மனித புதைகுழி தொடர்பான விசாரணைக்கு பிரிட்டன் தொழில்நுட்ப உதவி வழங்குமா என கேள்வியெழுப்பியதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயத்தைப் பற்றி சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு கடிதம் எழுதியதாகவும், அந்தக் கடிதத்தை அவர் வாசித்ததை உறுதி செய்ததாகவும் உமா குமரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து தனது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும் என்றும், நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது வெளியுறவுச் செயலாளரை நேரடியாக சந்தித்து இதுகுறித்து பேசுவேன் என்றும் அவர் வலியுறுத்தினார்.

