இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாண செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 54 பிற பொருட்களில் 43 பொருட்கள் 2025 ஆகஸ்ட் 5 பிற்பகல் பொதுமக்களுக்கு, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முன்னுரிமையுடன் காட்டப்பட்டன.
இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இதில் பங்கேற்றும், 16 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடிய தங்கள் உறவினர்களின் எந்தப் பொருளையும் அடையாளம் காண முடியாமல் வீடு திரும்பினர். எஞ்சிய பொருட்கள் தனிப்பட்ட நபர்களுடன் தொடர்பில்லாததால் காட்சிப்படுத்தப்படவில்லை.
எதிர்கால அகழ்வாய்வுகளில் புதிய பொருட்கள் கிடைத்தால் மீண்டும் காட்சிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்தார். ஊடகங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களை ஒளிப்பதிவு செய்ய நீதிமன்ற அனுமதி வழங்கப்படவில்லை.
மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியான இந்த தளத்தில், ஆகஸ்ட் 4 மற்றும் 5 தேதிகளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் உதவியுடன் ஸ்கேன் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மூன்று வாரங்களில் இதற்கான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 31வது நாளான ஆகஸ்ட் 5 வரையில், சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 130 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.

