யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அதில் சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பதாக, கிருஸாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகஸ் தெரிவித்துள்ளார்.
இதனை அவரது மனைவி எஸ்.சி. விஜேவிக்ரம, ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில், யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட சித்திரவதைக்கூடங்கள் பற்றிய தகவல்களையும் தனது கணவர் வெளியிடத் தயாராக இருப்பதாக மனைவி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகி வரும் நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தனது சகோதரரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால், உடனடி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ரோஹினி ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கடந்த 29 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் தனது சகோதரருக்கு சிறையில் உள்ளிருந்தும், வெளியிருந்தும் பல்வேறு அழுத்தங்கள் விடுக்கப்பட்டதோடு, சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு அச்சுறுத்தும் சம்பவங்களும் இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், சோமரத்ன ராஜபக்ஸவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அவர் அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

