காற்றாலை மின் கோபுர பாகங்களை ஏற்றிய பாரிய வாகனங்கள், மக்களின் கடும் எதிர்ப்புகளை மீறி, நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் இன்று (6) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்துள்ளன.
இந்த காற்றாலை மின் கோபுர பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது எனக் கோரி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-08) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் போராட்டம் நீடித்தது.
நேற்றைய தினம் (5-08) காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, போராட்டத்திற்கு வலு சேர்க்கப்பட்டது.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 2ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தையும், மன்னார் நகருக்குள் காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதன் காரணமாக, மன்னார்–மதவாச்சி பிரதான வீதியின் முருங்கன் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோபுரங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
ஆனால் இன்று அதிகாலை, நூற்றுக்கணக்கான பொலிஸாரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் பாதுகாப்பளித்த நிலையிலும், மக்களை அச்சுறுத்தி, குறித்த வாகனங்கள் மன்னாரை நோக்கி கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிகழ்வு, மன்னார் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

