ஜனாதிபதி தேர்தலின்போது மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவது மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டத்தை நிறுத்தும் கோரிக்கையுடன், மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து அமைதியான போராட்டத்தை நேற்று (5-08) இரவு மன்னார் தள்ளாடி பகுதியில் முன்னெடுத்து வந்தனர்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே கஜேந்திரன் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் மேலும் கூறுகையில், மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலும் இயற்கையும் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், மக்களின் தொடர்ந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், மன்னார் தீவில் 2ஆம் கட்ட காற்றாலை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்காகப் பாரிய காற்றாடிகள் மன்னாரை நோக்கி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், மக்கள் இரவு பகல் பாராமல் சாலைகளில் இறங்கி போராடி வருவதாக தெரிவித்தார்.
ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஸவின்; ஆட்சிக்காலத்தில் மன்னாரின் சில பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு, அது சுற்றுச்சூழலுக்கும் மக்களுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் பின்னர் அடுத்த கட்ட திட்டத்தை மேற்கொள்ள மக்கள் கடுமையாக எதிர்த்து தடுத்தனர்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக மன்னாருக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் பிரச்சினையை அறிந்து, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என்று உறுதியளித்தார்.
மக்களும் அவரது வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டனர்.
இன்று அவர் ஜனாதிபதியாகவும், பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவு பெற்றவராகவும் இருப்பினும், மன்னாரில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதைத் தடுக்க மக்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ள நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாடிகள் கொண்டு வரப்பட்டதால், மக்கள் வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் தேசிய பேரவையும் முழுமையான ஆதரவை வழங்கும் என்று கஜேந்திரன் வலியுறுத்தினார்.

