முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதும், ஒருவரின் மரணம் ஏற்பட்டதும்சம்பந்தமாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற ஏழு இளைஞர்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியதாகவும், தப்பியோடியவர்களில் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாக ஜெகதீஸ்வரன் கூறினார்.
இதுகுறித்து வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருந்ததாகவும், பொலிஸார் நீதியான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக உயர்மட்ட அமைச்சர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இதற்கான கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தரும் என அவர் உறுதியளித்தார்.

