வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஸ்டி அரசியல் தீர்வை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேசத்தின் திரியாய் கிராமத்தில் இன்று மக்கள் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயன்முனைவின் 10ஆம் நாளாகும்.
போர் பாதிப்புகளால் நீண்டகாலமாக சிக்கலில் உள்ள திரியாய் மக்கள், இன்றும் நில அபகரிப்பு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து, திரியாய் மக்களும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த பெருமளவான பொதுமக்களும், வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு நிரந்தர அதிகாரப் பகிர்வை வழங்கும் சமஸ்டி முறை அரசியல் தீர்வை அரசிடம் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தங்களின் நில உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை மீட்கும் வரை தங்கள் குரலைத் தொடர்ந்து எழுப்புவோம் என்று உறுதியளித்தனர்.

