அரசாங்கம் முன்மொழிந்துள்ள, முன்னாள் ஜனாதிபதிகளின் சில உரிமைகளை நீக்கும் சட்டமூலத்துக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதிகள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளனர்.
இதற்காக, அனைவரும் இணைந்து சுமார் 50 சட்டத்தரணிகள் கொண்ட குழுவை அணுகி, சட்டபூர்வ நிலைமை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலர் சாலையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
இது ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடந்தது.
இந்த சந்திப்பில், மகிந்த ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஜனாதிபதி சட்டத்தரணியின் தகவலின்படி, சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலும், அரசாங்கம் திட்டமிட்டபடி அதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.
மேலும், அடுத்த 14 நாட்களுக்குள் இந்த புதிய சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னாள் ஜனாதிபதிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

