முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட சான்றுப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்கள் உதவுமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர், சட்டத்தரணி கலாநிதி தற்பரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் நடைபெற்று வரும் வழக்கு இலக்கம் யுசுஃ804ஃ23-இன் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட தொல்பொருள் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த புதைகுழி 1994 முதல் 1996 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
காணாமல் போனோர் அலுவலகம், 2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க சட்டத்தின் கீழ், இந்த விசாரணையை கண்காணித்து வருகிறது.
மனித எச்சங்களின் அடையாளத்தைத் தீர்மானிக்க, பொதுமக்களின் உதவி அவசியமாக இருப்பதாகவும், புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட 45 வகையான உடைமைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களை அடையாளம் காண முடிந்தால், விசாரணைக்கு முக்கிய முன்னேற்றம் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவற்றில், உள்ளாடைகள், கால்சட்டைகள், மேற்சட்டைகள், பிரேசியர்கள், நாய் கழுத்துப்பட்டைகள், உலோக வளையல்கள் போன்றவை அடங்கும்.
இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள், எச்சங்களின் அடையாளங்கள், உடை வகைகள், ஏற்பட்டிருந்த காயங்கள் போன்ற விவரங்களை வழங்கினால், அவை விசாரணையில் முக்கிய ஆதாரங்களாக அமையும்.
இந்த தகவல்களின் அடிப்படையில், காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் உறவினர்கள் மற்றும் சாட்சிகளுடன் நேர்காணல் நடத்துவார்கள்.
சாட்சிகளின் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு, தகவல் இரகசியம் ஆகியவை சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்படும். மேலும், உணர்ச்சியைக் கிளறும் சாத்தியங்கள் உள்ளதால், உளவியல் ஆதரவுச் சேவைகளும் வழங்கப்படும்.
தகவல்கள் வழங்க, 2025 ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 4 வரை, ராஜகிரிய, மாத்தறை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.
ராஜகிரிய 0112861431, மாத்தறை 0412244684, முல்லைத்தீவு 0212286030, மட்டக்களப்பு 0652222229, யாழ்ப்பாணம் 0212219400 மற்றும் மன்னார் 0232223929 ஆகிய எண்ணங்களில் தொடர்பு கொள்ளலாம் என தற்பரன் தெரிவித்துள்ளார்.

